நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (46). பிளஸ்2 வரை மட்டுமே படித்துள்ள இவர், சேலம் மாவட்டம் இடைப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனர் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
தற்போது, வெப்படையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர், தனது வீட்டின் ஒரு பகுதியை கிளினிக் போல மாற்றி, நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வருவதாக எலந்தக்குட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, உரிய விசாரணை நடத்துமாறு குமாரபாளையம் அரசு மருத்துவர் அருணுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் காவல்துறையினர், மருத்துவர்களுடன் மணிவண்ணனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
மருந்தாளுநர் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு அவர், வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஆலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணிவண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.