Skip to main content

நான் அப்படி செய்திருந்தால் சின்மயி போலீசிடம் போகட்டும்... - குற்றச்சாட்டு குறித்து யூ-ட்யூபர் பிரஷாந்த் விளக்கம்  

Published on 08/10/2018 | Edited on 08/10/2018

கடந்த சனிக்கிழமை, பிரபல பின்னணி பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் யூ-ட்யூப் விமர்சகர் பிரஷாந்த், தன்னை உட்பட சில பெண்களுக்கு தவறாக மெசேஜ் செய்தார் என தெரிவித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்ட போது, தன்னை ஆதரிப்பதாகக் கூறி 'ஸ்வீட் ஹார்ட்' என்று அழைத்ததாகவும் பிறகு தான் அவரை ப்ளாக் செய்ததாகவும் தெரிவித்த அவர், தனது தோழிகளிடமும் பிரஷாந்த் தவறான எண்ணத்தில் பேசியுள்ளார் என்று சில 'ஸ்க்ரீன்ஷாட்'களை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து யூ-ட்யூப் விமர்சகர் பிரஷாந்தை தொடர்புகொண்டோம். அப்போது அவர் அளித்த விளக்கம்.
 

prashanth

 

chinmayi



”இன்று இருக்கின்ற தொழில்நுட்பத்தில் யார் வேண்டுமெனாலும் என்னவேண்டுமெனாலும் செய்யலாம் அதுபோன்ற ஒன்றுதான் இந்த ட்வீட் விஷயமும். மேலும் நான் அவருடன் பேசியதாக ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் அவரின் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில் என் பெயர்கூட இல்லை, அதுமட்டுமின்றி அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் நான் தவறாக பேசியதுபோலும் இல்லை. அதற்கடுத்ததாக மற்றொரு ட்வீட்டில் நான் தவறாக பேசியதாக பதிவு செய்திருக்கிறார். ஆனால், அதற்கான ஸ்க்ரீன் ஷாட் அவரிடம் இல்லை என்கிறார். ஆறு வருடத்திற்கு முன்பிருந்தே எனக்கும் அவருக்கும் பிரச்சனைகள் இருந்துவருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன், ட்விட்டரில் ராஜன் லீக்ஸ் என்ற பெயரில் ஒருவர் இயங்கி வந்தார். அவர் சின்மயி குறித்து தவறாகப் பதிவிட்டதாக சின்மயி போலீசில் புகார் செய்து, ராஜன் கைதாகும்வரை போனது. என் ஊரான அவிநாசியை சேர்ந்தவர்தான் அவரும். ஒரு அரசு ஊழியர் என்பதால், அவரது வேலை போய்விடும், குடும்பம் கஷ்டப்படும் என்று அவருக்காக சின்மயியிடம் பேசினேன். 'அவர் தவறே செய்திருந்தாலும், அவர் மீது கைது நடவடிக்கையெல்லாம் வேண்டாம். கைது செய்தால் அவர் பணியில் இருந்து இடை நீக்கம்  செய்யப்படுவார்' என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு சின்மயி அளித்த பதில் சரியான முறையில் இல்லை. அப்போது அவருடன் கொஞ்சம் பிரச்னை ஏற்பட்டது, அதில் இருந்து என்னை அடிக்கடி அவர் வம்புக்கு இழுத்துவந்தார். அப்படித்தான் இதையும் செய்திருக்கிறார். இவர் சொல்வது உண்மை என்றால், நிச்சயம் அவர் போலீசுக்கு போயிருக்க வேண்டும் அதையும் அவர் செய்யவில்லை. அதற்கு மேல் இது உண்மையாக இருந்திருந்தால் நானே ஒப்புக் கொண்டிருப்பேன். அவர் ஏதோ திட்டம்போட்டு செய்கிறார், செய்யட்டும் எதுவரை போகிறதோ போகட்டும் பார்ப்போம்” என்று பிரஷாந்த் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்