தமிழகத்திற்கு குறைவாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடுகள் குறித்தும் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், இன்று மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ''தடுப்பூசிகளை அதிகமாக உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ் உற்பத்தி செய்யப்படும்''எனத் தெரிவித்தது .
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், ''ஆக்சிஜன் விநியோகத்தை பொறுத்தவரை ஒடிசா போன்ற பகுதியிலிருந்து வரக்கூடிய 148 டன் ஆக்சிஜன் 'யாஸ்' புயலால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ''ஆக்சிஜன் விநியோகம் புயலால் பாதிக்கப்பட இருக்கும் நிலையில், மத்திய அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை மே 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அதே சமயம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் குறைவாக இருப்பதாகவும், டெல்லி போன்ற பகுதிகளுக்கு அதிகமாக உள்ளதாகவும் தெரிகிறது. இது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே இது தொடர்பாக மத்திய அரசு மீண்டும் ஆய்வு செய்து தடுப்பூசி ஒதுக்கீடுகளை முறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.