சென்னையில் நேற்று (06/11/2021) இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆங்காங்கே, மரங்களும் சாலைகளில் முறிந்து விழுந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். அதேபோல், பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலை மூடப்பட்டது. மேற்குமாம்பலத்தில் இருந்து தி.நகர் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலை மூடப்பட்டுள்ளது.
அசோக் நகர், தி.நகர், அடையாறு, மந்தைவெளி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வேளச்சேரி, வடபழனி, அசோக்நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீரை அகற்றும் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களில் தங்க வைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகமும், அரசும் முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை, வெள்ளம் சார்ந்தப் புகார்களைத் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பட்டுள்ளது. அதன்படி, 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். 1913 என்ற எண்ணிலும் மழை, வெள்ளம் சார்ந்த புகார்களைத் தெரிவிக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.