மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் திருவாரூர் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் குற்றவாளி என்று தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், தண்டனை விவரங்களையும் அறிவித்துள்ளது.
சென்னை பட்டினம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் தி.மு.க வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அசோகன், கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6- ஆம் தேதியன்று இரவு மது போதையில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதோடு, மனைவி மற்றும் மனைவியின் தாயார் இருவரையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு, தன் கை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டு மிரட்டி உள்ளார்.
பயந்து வீட்டை விட்டு தனது தாயாருடன் வெளியேறிய அவரது மனைவி, இது குறித்து, பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அசோகன் மீது மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அசோகனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்காக அசோகனின் கோரிக்கையை ஏற்று தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.