மக்கள் பிரச்சனைகள் எத்தனையோ தீர்க்கப்படாமல் வரிசையில் நிற்கும்போது, பிரதமரை வரவேற்க பேனர் வைக்க அனுமதிகோரி நீதிமன்றத்தில் வழக்குப் போடும் அளவுக்கு தமிழக அரசு சென்றிருக்கிறது. இதன்மூலம் தமிழக அரசை பிரதமர் மோடிதான் நடத்துகிறார் என்பதை உறதிப்படுத்தி இருக்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது, நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது முதல்வருக்கு தெரியவில்லை. என்ன பேசுகிறோம் என்பது அமைச்சர்களுக்குத் தெரியவில்லை என்றார்.
எஸ்.சி- எஸ்.டி. பிரிவினரின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு கொடுத்த நிதியை பயன்படுத்தாமல் அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறது மாநில அரசு. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு பயணம் சென்றதாக கூறிய முதல்வர், இதுவரை எவ்வளவு முதலீடுகளை கொண்டுவந்திருக்கிறார் என்பதை ஒரு வெள்ளை அறிக்கை மூலம் தெரிவிக்க மறுக்கிறார். ஒரு அரசு முறையாக நிர்வாகம் செய்தாலே, முதலீடுகள் தானாக வந்து குவியும் என்பதுதான் உண்மை என்றும் கனிமொழி கூறினார்.