
கொலையான அருண், சுரேஷ்
சென்னை இரட்டைக்கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் அருண். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவரும், இவரது நண்பர் படப்பை சுரேஷ் என்பவரும் கோட்டூர்புரம் அருகே 16/03/2025 அன்று இரவு மது குடித்துவிட்டு படுத்திருந்தனர். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், அருண் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோரை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு வருவதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதில், படுகாயமடைந்த படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் உயிரோடு இருந்த அருணை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட சுக்கு காபி சுரேஷ்
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அருணின் காதலியை சுக்கு காபி சுரேஷ் என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்துள்ளார். அதற்கு பழி தீர்ப்பதற்காக அருண் திட்டமிட்டு வந்துள்ளார். இதனை அறிந்த சுக்கு காபி சுரேஷ், அருணையும் அவரது அண்ணன் அர்ஜுனையும் கொலை செய்வதற்காக சம்பவத்தன்று இரவு தனது கூட்டாளிகளுடன் வந்துள்ளார். ஆனால், அர்ஜுன் எனக் கருதி படப்பை சுரேஷை அவர்கள் வெட்டிக் கொன்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நான்குக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக மொத்தம் எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.