நீர் நிலைகளை பாதுக்காக்கவும் நிலத்தடி நீரை சேமிக்கவும் வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. தமிழகத்திலுள்ள எடப்பாடி அரசு இதில் அக்கறைக் காட்டாத நிலையில், மத்திய அரசின் உத்தரவுகளுக்கு முன்பாகவே நிலத்தடி நீரை சேமிக்கும் பணிகளில் குதித்துள்ளது திமுக. தமிழகத்திற்கே முன்னோடியாக சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், சைதாப்பேட்டை தொகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்ய முதல் கட்டமாக 1000 இடங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைப்பதற்கான துவக்க விழாவை நடத்தியிருக்கிறார் தொகுதியின் எம்.எல்.ஏ.வான மா.சுப்ரமணியன். தொகுதி முழுவதும் பசுமையாக்க ”பசுமை சைதை” எனும் பேரில், 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார் மா.சுப்ரமணியன்.
இந்த பசுமைத் திட்டத்தில் 75 சதவீதம் நிறைவேறியுள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களாக சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடிய நிலையில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 60 ஆயிரம் லிட்டர் குடிநீரை லாரிகளில் கொண்டு வந்து சைதை மக்களின் தாகத்தை தீர்த்தார் மா.சுப்ரமணியன் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில், சைதை தொகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் மழைநீரை சேமிக்கவும் ஒரு திட்டத்தை உருவாக்கி தற்போது களமிறங்கியுள்ளார் மா.சுப்ரமணியன். மழைநீர் சேமிப்பு தொட்டிகளை 1000 இடங்களில் அமைப்பதற்கான துவக்க விழா, சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெருவில் நடந்தது. விழாவுக்கு மா.சுப்ரமணியன் தலைமைத் தாங்க, மழைநீர் சேமிப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
விழாவில் பேசிய ஸ்டாலின், ‘மழைநீர் சேமிப்பு திட்டம்’ என்பது அவசியமானது. குடிநீர் பிரச்சனையிலிருந்து நம்மை இது பாதுகாக்கும். ஆளும் கட்சி செய்ய வேண்டிய இத்தகைய பணிகளை எதிர்க்கட்சியான திமுக செய்து வருகிறது. இதனால் திமுகவைத்தான் ஆளும் கட்சியாக மக்கள் கருதுகின்றனர். தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் வரும் என்பதை 6 மாதங்களுக்கு முன்பாகவே எச்சரித்தோம். ஆனால், அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இப்பிரச்சனையை தீர்க்க நாம் கையில் எடுத்திருக்கிறோம். எதிர்காலத்தில் குடிநீருக்காக சைதை மக்கள் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மக்கள் பயன்பெறும் வகையில் மா.சுப்ரமணியன் இந்த திட்டத்தைத் துவக்கியிருக்கிறார். இந்த திட்டம் முழுமைபெறும்போது சைதை தொகுதியின் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். மக்களுக்கு குடிநீர் பிரச்சனையே வராது என்றார் மு.க.ஸ்டாலின்.
திட்டத்தின் நாயகனான மா.சுப்ரமணியன், மழைநீர் சேமிப்பின் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் விவரித்துப் பேசினார். திட்டத்தின் துவக்க விழாவில் சென்னை தெற்கு மாவட்ட திமுகவினரும் தொகுதி மக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மழைநீர் சேமிப்பு தொட்டிகளை முறையாக அமைப்பதன் மூலமே மழைக்காலங்களில் வேஸ்ட் ஆகும் நீரை சேமிக்க முடியும் என்கிற விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தி தமிழகத்திற்கே முன்னோடியாக களத்தில் இறங்கியுள்ளது சென்னை தெற்கு திமுக! இதனை தற்போது உற்று கவனிக்கத் துவங்கியிருக்கிறது எடப்பாடி அரசு!