Skip to main content

சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் ஐந்தாண்டுகளாக நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை?- உயர்நீதிமன்றம் கேள்வி!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

chennai district police chennai high court

 

சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனையென அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் துரைராஜ் என்பவர் சார்பில் ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

 

இந்த மனு, நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகியிருந்தார். அவரிடம் நீதிபதி, ‘சென்னை நகரில் என்ன நடக்கிறது? கொலை வழக்குகள் 15, 16 ஆண்டுகள் நிலுவையில் இருக்கின்றன. இத்தனை ஆண்டுகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை கைதிகளாக உள்ளனர். புதிய வழக்குகளில் கூட சாட்சிகள் பல்டி அடித்துவிடும் நிலையில், 15 ஆண்டுகள் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால், சாட்சி சொல்ல யார் வருவார்கள்? எப்படி தண்டனை பெற்று கொடுக்கப் போகிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார்.

 

மேலும், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனையென, ஜனவரி 25- ஆம் தேதி அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த அறிக்கையைப் பார்த்தபின், ஆணையரிடம் விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

‘அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம், பவாரியா கொள்ளைக் கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு எதிரான வழக்கை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.’ என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்