சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மதுரை, நெல்லை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் விவரங்கள், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் கரோனா உறுதியான 83,377 பேரில் 14,923 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா பாதிப்பால் 1,376 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 67,077 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சென்னையில் 58.34% ஆண்கள், 41.66% பெண்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.