சோதனைச்சாவடிகளில் பணியாற்றும் எஸ்ஐ, தலைமைக் காவலர்களுக்கும் தற்காப்புக்காக கைத்துப்பாக்கி வழங்க தமிழக காவல்துறை முடிவெடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ வில்சன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்தின்போது, சிறப்பு எஸ்ஐ வில்சனிடம் தற்காப்புக்காகக் கூட கையில் துப்பாக்கியோ, லத்தியோ இல்லை.
அதனால் பயங்கரவாதிகள் மீது அப்போது அவரால் எதிர்த்தாக்குதல் நடத்த முடியவில்லை. முடிந்தவரை போராடிய அவர், இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். மாநிலம் முழுவதும் சோதனைச் சாவடிகளில் காவல் பணியில் ஈடுபடும் காவல்துறையினரிடம் இதுவரை துப்பாக்கிகள் வழங்கப்படாமல் இருந்தால், அவர்களை குறிவைத்து சமூக விரோத கும்பல் மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை அறிக்கை அனுப்பி உள்ளது.
இதையடுத்து, முதல்கட்டமாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொளத்தூர், ஓசூர் உள்ளிட்ட தமிழக, கர்நாடகா எல்லையோர சோதனைச்சாவடிகளில் கடந்த சில நாள்களாக காவல்துறையினர் கையில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சோதனைச்சாவடிகளில் பணியாற்றும் காவல்துறையினருக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டு உள்ளன.
எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையின் போதும் தற்காப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சோதனைச்சாவடியில் பணியாற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. படிப்படியாக அனைத்து சோதனைச்சாவடி காவலர்களுக்கும் தற்காப்புக்காக துப்பாக்கிகள், இரவில் அதிக சக்தியுடன் ஒளி உமிழும் சோலார் விளக்குகள் ஆகியவை வழங்கப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.