தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் சாலையில், கனிமவளத்துறை சார்பில், சோதனைச் சாவடிகளை அமைக்க உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த சதீஸ் என்பவர், கற்கள், ஜல்லிகள், எம்-சாண்ட் போன்றவற்றை தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குக் கொண்டுசெல்ல தடைகோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வுமுன் இன்று (11/02/2021) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் சாலையில், கனிமவளத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்க உத்தரவிட்டனர். மேலும், கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க கனிமங்களின் அளவைப் பரிசோதிக்க எல்லைகளில் எடை நிலையம் அமைக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.