ஈரோட்டைச் சேர்ந்த ‘உணர்வுகள்’ என்ற அமைப்பு, சென்ற மார்ச் மாதம் முதல், கரோனா காலகட்டங்களில் மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்தனர். இதன், ஒரு அங்கமாக ‘உடுக்கை’ (ஏழைகளுக்கு துணிகள் வழங்குதல்) என்ற திட்டத்தின் மூலமாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மற்றும் எச்.ஐ.வி நோயால் இறந்த பெற்றோர்களின் ஒரு வயது முதல் 18 வயது வரை உள்ள 134 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்குப் புதிய ஆடைகளை இந்த நிறுவனத் தலைவர் ஜி.ராஜன் தலைமையில், 10ஆம் தேதி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு கலந்துகொண்டு குழந்தைகளுக்கான புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை மருத்துவர்களிடம் வழங்கினார்.
'உணர்வு'களின் தலைவர் ராஜன் பேசுகையில், இனிவரும் காலங்களில் இக்குழந்தைகள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அவர்கள் படிப்பதற்கு எங்கள் அமைப்பின் சார்பில் அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்து படிக்க வைக்கப்படும்" என்றார். இந்த நிகழ்ச்சியில், அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர், டாக்டர் வெங்கடேஷ், ஆர்.எம்.ஓ பொறுப்பு டாக்டர் ரவிச்சந்திரன், ஏ.ஆர்.டி அலுவலக அதிகாரி டாக்டர் ரமேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தீபாவளி நேரத்தில் இப்படிப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், ஏழைகளுக்கு உதவுவது வரவேற்கத்தக்கது.