சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு நகைகளை ஆய்வு செய்ய அனுமதி இல்லை. அதனால் வெளி தணிக்கையாளர்கள் மூலம் கணக்கு மற்றும் நகைகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது என கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''இந்து சமய அறநிலையத் துறையினர் உள்நோக்கத்துடன் கோயில் நிர்வாகத்தைப் பற்றி அவதூறு செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். நடராஜர் கோயில் கணக்கு கேட்டு 2-க்கும் மேற்பட்ட இந்து அறநிலையத் துறையினர் கடிதம் அனுப்பினர். பின்னர் ஆய்வுக்குழு வந்தது. அப்போது நாங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் தனி சமயப் பிரிவினரான பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வரும் இக்கோயிலில் அறநிலையத் துறையின் சட்டத்தின் கீழ் கணக்கு கேட்கவோ, ஆய்வையோ நடத்த முடியாது எனவும் வெளிப்படையாக பதில் தெரிவித்தோம். அதன் பின்னரும் 2005 முதல் 2022 வரை உள்ள நகை சரிபார்ப்பு செய்ய வேண்டும் எனக் கோரினர். அதன் பின்னர் 1955 முதல் 2005 வரை நகை சரிபார்ப்பு, கணக்கு ஆய்வு செய்வதாகக் கோரியபோது நாங்கள் பட்டயம் பெற்ற வெளி தணிக்கையாளர்கள் மூலம் கணக்குகளையும் நகைகளையும் சரிபார்த்து தணிக்கை செய்ய உள்ளோம் எனப் பதில் தெரிவித்திருந்தோம்.
அதன்படி கடந்த செப். 20-ம் தேதியிலிருந்து கோயில் சட்ட ஆலோசகரான எனது மேற்பார்வையில் பட்டயம் பெற்ற இரு தணிக்கையாளர்கள் மூலம் கோயில் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து தயாராக வைத்துள்ளோம். நடராஜர் கோயில் தனி நிர்வாகம் என்பதால் வெளிப்படைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் வெளி தணிக்கையாளர்களை வைத்து தணிக்கையை தொடங்கி உள்ளோம்.
கோவில் நிர்வாகத்தில் தவறு உள்ளது. நாங்கள் ஆய்வு செய்வோம் என்று அறநிலையத்துறை அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இறுதியாக நாங்கள் கேட்கிறோம், கோவிலில் நடைபெற்ற எந்த தவறுக்கு என்ன ஆதாரம் உள்ளது. ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும். குற்றம் இருந்தால் அந்த ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும். அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம். ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்வதால் அது உண்மையாகி விடாது'' என்றார். பேட்டியின்போது கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் உடனிருந்தார்.