விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
'கோதை பிறந்த ஊர், கோபாலன் வாழும் ஊர்' என்ற சிறப்பைப் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, இன்று (01/08/2022) தேரோட்டம் நடைபெற்று வருகிறது. ஆண்டாள் கோயில் தேரானது திருவாரூர் தேருக்கு அடுத்தபடியாக 96 அடி உயரத்துடன் கலைநயம் மிக்க மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பைப் பெற்றது.
இந்த நிலையில், சிறப்பு அலங்காரங்களுடன் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னாரும் தேரில் எழுந்தருள தேரோட்டத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
தேரை இழுக்க ஏழு வடங்கள் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், பெண்களுக்கென இரண்டு வடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர் திருவிழாவைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50- க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்புப் பணியில் 1,000- க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.