தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 62 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி பெயர் இடம்பெறாத நிலையில், தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி உட்பட 47 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.