வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்கள் நாளை (04.12.2023) ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்படும் அட்டவணைப்படி இயங்கும் எனத் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மிக்ஜாம் புயல் காரணமாக நாளை 04.12.2023 (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.