Skip to main content

சாந்தன் மரணம்; முகாமில் இருக்கும்போது உடல்நிலை பாதிப்பா?

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Chandan is said to be unharmed during his stay in the camp

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சாந்தன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடம் சிறையில் இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்திருந்தது. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அகதிகள் முகாமில் சிறப்பு வசதிகள் ஏதுமில்லை, நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சாந்தன் தரப்பு தெரிவித்திருந்தது. இந்தநிலையில் அவர் தற்போது உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி குறிப்பிடுகையில், 'ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்ட பின்னரும் அவர் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்' இலங்கைக்கு அனுப்புவோம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அனுப்பப்படவில்லை. இந்த நிலையில் தான் முகாமில் சரியான வசதிகள் இல்லாததாலும், மருத்துவ வசதி இல்லாததாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்துள்ளார். இன்று இரவு அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இலங்கைக்கு செல்வதாக இருந்தது. இதற்கிடையில் இவர் உயிரிழந்துள்ளார்'' என்றார்.

இந்த விவகாரம் குறித்து நீண்டகாலமாக கவனித்து வருபவர்களிடம் நாம் பேசிய போது, “ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்துவந்த சாந்தன், ஆரம்ப காலகட்டத்தில் சிறைவாசிகளுடன் பேசி வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவர், யாருடனும் பேசாமல் அதிகம் மௌனம் காத்து வந்தார். தீவிர சாய்பாபா பக்திமானான சாந்தன், சிறையில் ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிடும் பழக்கத்தையும், அதிக நேரம் தியானம் மேற்கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருந்தார். அதனால் அவரது உடல் சிறையில் இருக்கும்போதே பாதிப்படைய ஆரம்பித்துள்ளது. அப்போதே அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. 

அதோடு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் ஸ்ரீலங்காவில் இருந்ததால், அவரை யாரும் பார்க்க வரமாட்டார்கள். சில தமிழ் ஆர்வலர்கள் அவரை காண சிறைக்கு வந்தாலும், அவர்களை சாந்தன் பார்ப்பதை தவிர்த்துவந்தார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு சிறப்பு முகாமிற்கு செல்லும் போது கூட உடல்நிலை பாதிப்பு இருப்பதால் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்றுதான் அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு சாந்தனின் குடும்பத்தினர் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தத்திடம், இந்திய அரசு சாந்தன் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்கவுள்ளது. அதனால் இலங்கை வரும் அவரை இலங்கை அரசு கைது செய்யக்கூடாது. அதுகுறித்து நீங்கள்தான் அரசாங்கத்திடம் பேசவேண்டும் என்று கோரிக்கை வைக்க, அவரும் அரசிடம் பேசி அனுமதியும் வாங்கி கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் சிறப்பு முகாமில் இருந்த சாந்தனிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த சூழலில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்”எனத் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்