Skip to main content

"இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

"Chance of Heavy Rain in These Districts" - Meteorological Center Info!

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 

 

தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (12/10/2021) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

 

நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூரில் 10 செ.மீ, புதுச்சேரி, சோழிங்கநல்லூர், மன்னார்குடி, வீரகனூர் மற்றும் சென்னையில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வரும் அக்டோபர் 13ஆம் தேதி அன்று அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் அக்டோபர் 14ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக ஆந்திரா, ஒடிசா கடற்கரை நோக்கி நகரக் கூடும்.

 

இதன் காரணமாக மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்