திண்டுக்கல், தேனி, திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக தீவிரமடைந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இதனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சில இடங்களில் மிக கனமழை பதிவாகியது. இந்நிலையில் மீண்டும் அது காற்றழுத்த பகுதியாக வலுவிழந்துள்ளது. இதன் காரணமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பொழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு திசை காற்றினுடைய வேக மாறுபாடு காரணமாக கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்த வரை இரண்டு நாட்கள் லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் தமிழக பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.