நடிகர் விஷாலின் ‘சக்ரா’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்ற டிரைடெண்ட் ஆர்ட்ஸின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நடிகர் விஷால் - தமன்னா நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக உறுதி அளித்து, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றாமல் விஷால் இழுத்தடித்தாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இயக்குநர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையைச் சொல்லி, அதைப் படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் ‘சக்ரா’ என்ற படத்தை இயக்குநர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை, இயக்குநர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்தப் படத்தை ஓடிடி-யில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.3 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதத்தை வழங்க விஷாலுக்கு உத்தரவிட வேண்டுமென்றும், தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து, வேறு நபருக்கு படமெடுக்க ஆனந்தனுக்கு தடைவிதிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை இன்றைய தினம்(செப் 30) தள்ளி வைத்திருந்தார். அதுவரை, சக்ரா திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சக்ரா படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபப்ட்டது. அதில், டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவத்திற்காக, தான் நடித்த 'ஆக்ஷன்' திரைப்படம் போதிய லாபம் ஈட்டியுள்ளது. 'சக்ரா' திரைப்படம் தொடர்பாக 'ஆக்ஷன்' பட தயாரிப்பாளர் ரவீந்திரனுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், சக்ரா படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.