தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைக் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2024) சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தியது போலவே, இரண்டாவது கட்ட பணிகளையும் செயல்படுத்தவேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு. இந்த இரண்டாவது கட்ட பணிகள் காலதாமதமின்றி மேற்கொள்வதற்காக, 2019ஆம் ஆண்டு, மாநில அரசின் நிதியிலிருந்தும், கடன் பெற்று பணிகளைத் துவக்கி, பின்பு மத்திய அரசோடு இணைந்து செயல்படுத்தும் திட்டமாகச் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் இதனை ஏற்றுக்கொண்டு, 2020ஆம் ஆண்டில் இதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சர், இதற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படும் என்று 2021-2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் திட்ட முதலீட்டு வாரியம் இதற்கான ஒப்புதலை, 2021ஆம் ஆண்டே வழங்கியது. இந்தப் பணிகளுக்கு, இதுவரை 18 ஆயிரத்து 564 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருந்தாலும், இதுவரைக்கும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படாத காரணத்தால், இதற்கான மத்திய அரசின் நிதி, தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே, தாமதமின்றி இந்த நிதியை உடனடியாக வழங்கப்படவேண்டும் என்று நான் கேட்டிருக்கிறேன்” எனக் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் கடந்த 3ஆம் தேதி (03.10.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, “சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடியில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.119 கி.மீ. நீளமுள்ள 2ஆம் கட்டத் திட்டம் 3 தாழ்வாரங்களாகப் பிரிக்கப்பட்டு 120 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திற்கான நிதி பகிரவு குறித்து மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது அதில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட மொத்தம் மதிப்பீட்டில் 65% நிதியை மத்திய அரசு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. அதாவது மொத்த மதிப்பீட்டில் ரூ. 33 ஆயிரத்து 593 கோடி கடன் கடன் மூலமும், ரூ. 7 ஆயிரத்து 425 கோடி சார்பு நிதிநிலை கடனையும் மத்திய அரசு வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பன்னாட்டு முகமையிடம் இருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகவே கருதப்படும். அதே சமயம் மீதமுள்ள 35 சதவீதம் மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதி உதவி செய்யும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.