"அந்த பணத்த என்கிட்ட கொடுங்க... உங்களுக்கு நா வேல வாங்கி தர்றேன், அதுவும் அரசாங்க வேல" என பொய் சொல்லி பணத்தை மோசடி செய்த மத்திய அரசு அதிகாரியின் செயல் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு இவரது நண்பர் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். பிரசாந்த் உத்தமன் மத்திய அரசின் Hindustan scout and guides state chief commisioner பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில், பிரசாந்த் உத்தமன் ராஜேஷ்குமாரிடம் கோவை என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள மத்திய அரசின் Hindustan scout and guides-இல் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார். மேலும், அந்த பணத்தையும் பெற்றுக்கொண்ட பிரசாந்த் உத்தமன் அதற்கான பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.
இதையடுத்து, ராஜேஷ்குமார் அந்தப் பணி ஆணையை எடுத்துக்கொண்டு பணியில் சேரச் சென்றபோது அது போலியான பணி ஆணை என்பது தெரிய வந்துள்ளது. அப்போது, இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ்குமார், தன்னிடம் பணம் வாங்கிய உத்தமனிடம் இந்த போலி பணி ஆணை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரும்படி பலமுறை கேட்டு வந்துள்ளார். ஆனால், அந்த பிரசாந்த் உத்தமனோ எந்தவித விளக்கமும் அளிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த ராஜேஷ்குமார், பிரசாந்த் உத்தமன் மீது சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பிரசாந்த் உத்தமன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம், ஏற்கனவே பிரசாந்த் உத்தமன் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்ற கார் மெக்கானிக் ஒருவரிடம் இதே வேலை வாங்கித் தருவதாகக் கூறி 9 லட்சத்தை வாங்கிக் கொண்டு போலியான பணி ஆணையை வழங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கும் இதே காவல் நிலையத்தில் தான் பதியப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.