மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இந்நிலையில் நிவாரணப் பணிகளுக்காக மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் இக்குழு வருகை தந்துள்ளது. இரண்டு குழுக்களாகப் பிரிந்து வட மற்றும் தென் சென்னை பகுதிகளில் ஆய்வு செய்ய திட்டமிட்டனர். இக்குழுவினர் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். மத்திய ஆய்வுக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து முதல் குழு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இரண்டாம் நாளாக நேற்று பல இடங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்தது. இந்த நிலையில் புயல் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து மத்தியக் குழு தமிழக முதல் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர். அதே நேரம் வெள்ள நிவாரண தொகையாக 6 ஆயிரம் ரூபாய் தருவது தொடர்பாக சென்னையில் கூட்டுறவு பணியாளர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலகங்களில் சார்பதிவாளர்களால் இந்த பயிற்சி தரப்பட உள்ளது. சென்னை வடக்கு மண்டலத்தில் 6000 ரூபாய் நிவாரண வழங்க 590 ரேஷன் கடைகளுக்கு நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நியாய விலை கடை உரிமையாளர், கூடுதல் பணியாளர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் நிவாரணம் ரூ.6000 வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.