தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன்களான வியாபாரிகள் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டதாகக்கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து கடலூரில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், "தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறையினர் என அனைவரும் கரோனாவை எதிர்த்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில், சாத்தான்குளம் காவல்துறை தந்தை, மகன் என ஜெயராஜ், பென்னிக்ஸ் 2 பேரையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கி, மரணம் அடையும் தருவாயில் அவர்களை கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்திருக்கிறார்கள். இது சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு அடித்து கொலை செய்த சம்பவம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இரண்டு அப்பாவிகளை காவல் நிலையத்தில் உள்ளவர்கள் அடித்து இருக்கிறார்கள். அந்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியில் இருந்த காவலர்களை கைது செய்ய வேண்டும். இறந்தவர்களின் காயங்களை முறையாக பார்க்காத, பதிவு செய்யாத நீதிபதி, மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கொடூரத்தை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தமிழக அரசு, முதலமைச்சர் இதை மூடி மறைப்பதை கைவிட்டு குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அந்த குடும்பத்திற்கு தமிழக அரசு கொடுத்திருக்கின்ற நிவாரணம் போதாது. அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார். அவரிடம் 'கரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் வெளிவருகின்ற இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை பார்த்தாலே தெரிகிறது. ஆகவே இதில் தமிழக அரசு செயல்பாடு தோல்வி என்றுதான் நாங்கள் கருதுகிறோம்" என்றார்.
இதேபோல் இதனை கண்டித்து கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திலும், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி போன்ற பகுதிகளிலும் மக்கள் அதிகாரம், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஐந்தைந்து பேர்களாக தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது உயிரிழந்த குடும்பத்திற்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரியும் கைகளில் பதாதைகளை ஏந்தி, கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.