சேலத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ள கைதிக்கு செல்போன், கஞ்சா வழங்கிய புகாரின் பேரில் தலைமை காவலர் உள்ளிட்ட நான்கு காவலர்களிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான ஸ்ட்ராங் ரூமில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் மணி உள்ளிட்ட நான்கு பேர், அந்த கைதியிடம் டிச. 9ம் தேதி, செல்போன், கஞ்சா பொட்டலங்களை வழங்கியுள்ளனர். கைதியை பார்க்க வந்த கூட்டாளிகள் மூலமாக செல்போன், கஞ்சா ஆகியவற்றை பெற்று கைதியிடம் கொடுத்துள்ளனர். ஸ்ட்ராங் ரூமில் இருந்தபடியே அந்த கைதி, தனது கூட்டாளிகளிடம் செல்போனில் பேசுவதற்கு காவலர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உடனடியாக ஸ்ட்ராங் ரூமில் குறிப்பிட்ட அந்த கைதியிடம் சோதனை நடத்தியதில், அவரிடம் இருந்து செல்போன், கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தலைமைக் காவலர் மணி உள்ளிட்ட நான்கு காவலர்களும் உடனடியாக ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்புப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தவும் ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில், சேலம் தெற்கு காவல்துறை துணை ஆணையர் மாடசாமி அவர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் சேலம் மாநகர காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.