நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவரது இரங்கல் செய்தியில், ''விவேக்கின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு; அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நடிகர் விவேக்கின் மரணச் செய்தி கேட்டு நடிகை கோவை சரளா கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
''திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்; எல்லோர் இதயங்களிலும் வாழ்வீர்கள் விவேக் சார்'' என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
''விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதர் அவரை நாம் இழந்துவிட்டோம்'' என நடிகர் யோகிபாபு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் மயில்சாமி, ஆனந்தராஜ், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
''நடிகர் விவேக் மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்திற்கே பேரிழப்பு என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
''சமூக அக்கறையுடன் பணியாற்றி மக்கள் நெஞ்சங்களில் நாயகனாக உயர்ந்தவர் விவேக்'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது.