கண்காணிப்பு கேமராக்களை அமைப்பதால் திண்டுக்கல்லில் குற்றங்கள் குறைந்துள்ளதாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி கூறியுள்ளார்
திண்டுக்கல் மாநகர் பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி கொள்ளை, கொலை சம்பவங்கள் நடந்துவருகிறது. இதற்குத் தீர்வு காணவும், குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கும் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள நகர்ப் பகுதிகளில் காவல்துறையினர், கண்காணிப்பு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பாகக் குடியிருப்புப் பகுதிகளில் பாதுகாப்பிற்கு உகந்த வகையில் கண்காணிப்பு கேமராக்களை தாங்களே அமைத்து காவல் துறையினருக்கு உதவி செய்தும் வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகரில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட விஸ்தரிப்பு பகுதியான ராஜீவ் காந்தி நகர், மணி நகர், நேசமணி நகர், நாகவேணி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 26 சி.சி.டி.வி. கேமராக்களை பாதுகாப்பு நலச் சங்க விரிவாக்கக் குழு சார்பாக அமைக்கப்பட்டது. இதனை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
அதன்பின் பேசிய சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, “கண்காணிப்பு கேமரா அமைப்பதால் திண்டுக்கல்லில் குற்றங்கள் குறைந்துள்ளது. மேலும், குற்றங்களைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவியாக இருக்கிறது. குடியிருப்பு பகுதிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவது 24 மணி நேரமும் காவலர் பாதுகாப்புப் பணியில் இருப்பதற்குச் சமம்.” என்று கூறினார்.