திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாச்சலூர் மலைக் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த ஒன்பது வயது மாணவி, கடந்த ஒருவாரத்திற்கு முன்பு பள்ளியின் பின்புறம் உடல் கருகி இறந்த நிலையில் கிடந்தார்.
இது சம்பந்தமாக மாணவியின் தந்தை சத்யராஜ் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் கடந்த ஒரு வாரமாக தீவிர விசாரணை செய்துவந்தனர். அப்படியிருந்தும் குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிவந்தனர். இந்நிலையில், மேல்மலை, கீழ்மலைப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மாணவி மரணத்திற்குக் காரணமான குற்றவாளியைக் கைது செய்யக் கோரி ஆங்காங்கே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோல் நேற்றும் (22.12.2021) திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி குரல் கொடுத்தனர். இந்நிலையில்தான் திடீரென இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் பத்திரிகையாளர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா பேசும்போது, ''பாச்சலூர் பள்ளி மாணவி இறந்த வழக்கில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகிறது. சந்தேக மரணம் என்று வழக்குப் பதிந்த நிலையில் எதற்காக அவசரகதியில் மின்மயானத்தில் மாணவியின் உடல் எரியூட்டப்பட்டது. எதற்காக இவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை. அதேபோல் அரசு பள்ளி என்பதால் நடந்த குற்றத்தை மறைக்கப் பார்க்கிறார்கள் என தெரிகிறது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இருப்பினும் இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. சிபிசிஐடிலும் உள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசாரே உள்ளனர். அவர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக முறையாக விசாரிக்க இயலாது. எனவே சிபிஐ விசாரணைக்கு வழக்கினை மாற்றம் செய்ய வேண்டும். மாணவி உயிரிழந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று கூறினார்.
இதில் மாவட்டச் செயலாளர்கள் சிவக்குமார், ஜான் கென்னடி, மாவட்ட அமைப்புச் செயலாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவி, கோபால் மற்றும் எடிபால் ராயப்பன், ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.