தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜனவரி 19ம் தேதி இறந்தார்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர். அதேநேரம் மாணவியை மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என பாஜக உள்ளிட்ட சிலர் சர்ச்சைகளை எழுப்பினர்.
இதுகுறித்து மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கடந்த ஜனவரி 31ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தொடர்ந்து மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், சிபிஐ விசாரிக்கத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து சிபிஐ தங்களின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 15ம் தேதி வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இன்று மதியம் 12 மணி அளவில் திருச்சி வழியாக மாணவி படித்த மைக்கேல்பட்டி பள்ளிக்கு சென்னை சிபிஐ ஐ.ஜி வித்யா குல்கர்னி தலைமையில் எஸ்.பி., டிஎஸ்பி ரவி ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் நான்கு கார்களில் விசாரணைக்காக வந்தனர். தொடர்ந்து பள்ளி விடுதியில் விசாரணை செய்து வருகின்றனர். விடுதி காப்பாளர் சகாயமேரி, பள்ளி தலைமை ஆசிரியர் பிராங்கிளின் மேரி, மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரிடம், விசாரணை அதிகாரியான வல்லம் டி.எஸ்.பி. பிருந்தா விசாரணை நடத்தினார்.