திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் உள்ள மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியின் பின்புறத்தில் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்தத் தகவல் குழந்தையின் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குச் சென்று மாணவியை மீட்டு அவர் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் சத்யராஜ், தாண்டிக்குடி போலீசில் புகார் கொடுத்தது தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். ஆனால், மாணவியின் மர்ம மரணம் குறித்து போலீசார் கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதை கண்டு கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து மாணவி, இறந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் சந்தானலட்சுமி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. தென் மண்டல எஸ்.பி. முத்தரசி, டி.எஸ்.பி. சரவணன், இன்ஸ்பெக்டர் சந்தானலட்சுமி ஆகியோர் பாச்சலூர் மலை கிராமத்திற்கு சென்று பள்ளியின் பின்புறத்தில் மாணவி எரிந்த நிலையில் கிடந்த இடங்களை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொது மக்கள், சிறுமியின் பெற்றோர், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை செய்து வருகிறார்கள். இப்படி மாணவி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., பல தரப்பினரிடமும் அதிரடியாக விசாரணை நடத்தி வருவதால், மாணவியின் மரணத்தில் தொடர்புள்ள குற்றவாளிகள் யார் என்பது கூடிய விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.