கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக பள்ளி நிர்வாகி ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா, கணித ஆசிரியை கிருத்திகா உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
மாணவி மரணம், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதன் விசாரணையை எஸ்.பி. ஜியாவுல்க மற்றும் கூடுதல் எஸ்.பி. கோமதி அடங்கிய சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டீம் விசாரித்துவருகிறது.
இந்நிலையில், மேற்படி ஐந்து பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனுத் தாக்கல் செய்தனர். நீதிபதி புஷ்பராணி, இந்த வழக்கில் விசாரணை செய்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். பள்ளி நிர்வாகிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர்.