காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் நீர் திறக்கக்கூடாது என கன்னட அமைப்புகள் போராடி வருகின்றன. தொடர்ந்து தமிழக அரசு காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை, கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 30,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் சுமார் 10,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. நாகையில் சுமார் 23,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இந்த கடையடைப்பானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் கூடிய தமிழக சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக தனி தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.