சென்னையில் பல இடங்களில் எலக்ட்ரானிக் சிகரெட் இயந்திரம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் எலக்ட்ரானிக் சிகரெட் பெட்டிகளை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்த நிலையில், போலீசார் தரப்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் பேசிய அதிகாரி, ''நிறைய கடைகளில் நேற்று மற்றும் இன்று ஏழு தனிப்படை கொண்ட காவல்துறையினர் சோதனை செய்ததில் வடசென்னை, தென் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இ-சிகரெட் எனும் எலெட்ரானிக் சிகரெட் பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1300 எலக்ட்ரானிக் சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது வரைக்கும் 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு விழிப்புணர்வுக்காக சொல்கிறோம், எலக்ட்ரானிக் சிகரட்டை பயன்படுத்தக்கூடாது. இதை அரசு தடை செய்துள்ளது. 2019ல் இருந்து இதற்கு தடை இருக்கிறது. இதை பயன்படுத்தினால் அது உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும். இது போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்தினால் காவல்துறை சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தரும்.
பிடிக்கப்பட்ட எலக்ட்ரானிக் சிகரெட்களின் விலை ரூ.3000 அதிலிருந்து 5 ஆயிரம் வரை உள்ளது. அரவுண்ட் 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய எலக்ட்ரானிக் சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தொடர்ச்சியாக இன்றிலிருந்து மீண்டும் நமது தனிப்படைகள், கடைகளில் சோதனை செய்வார்கள். கடைக்காரர்களுக்கும் இதன் மூலம் சொல்வது என்னவென்றால் நீங்கள் இதுபோன்ற எலக்ட்ரானிக் சிகரெட்களை விற்கக்கூடாது. காவல்துறை முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்துதான் இந்த எலக்ட்ரானிக் சிகரெட் கொண்டுவரப்படுகிறது. இதற்கான புலன் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது'என்றார்.
ஏற்கெனவே கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக சென்னையில் பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இ-சிகரெட் அதிக அளவில் கைப்பற்றப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.