சாதிச் சான்றிதழ் வேண்டும் இல்லையென்றால் தேர்வு எழுத முடியாது என்று நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் 5ம் வகுப்பு முதலே மாணவ மாணவியருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. இதில் தனியார் பள்ளி என்றில்லாமல் அரசுப் பள்ளிகளும் சேர்ந்து கொள்வதுதான் வேதனையான விஷயம். இதனால் சாதிச் சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தையே முற்றுகையிட்டுள்ளனர் ஆரம்ப வகுப்பு மாணவ மாணவிகள் தென்காசி அடுத்து பாட்டபத்து மற்றும் உடையார் தெரு பகுதியில் சுமார் 60 குடும்பங்களுக்கும் மேற்பட்ட புதிரை வண்ணார் சமுதாய மக்கள் வசித்து வருகின்றர்.
இவர்கள் நேற்று காலை பள்ளிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுடன் தாலுகா அலுவலகத்தில் திரண்டனர். புதிரை வண்ணார் எழுச்சி பேரவை மாவட்ட செயலாளர் இசைவாணன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் ரமேஷ்,ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட நிதி செயலாளர் ஆனந்த், செய்தி தொடர்பாளர் இளையராஜா,துணை செயலாளர் செல்வகணேஷ் உள்ளிட்டோருடன் தாலுகா அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது.
நாங்கள், புதிரை வண்ணார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். எங்களது குழந்தைகளின் கல்விக்காகவும், அரசு நலத்திட்ட உதவிகளை பெறவும், சாதிச் சான்றிதழ் அத்தியாவசிய தேவையாக உள்ளது. இது குறித்து ஏற்கனவே கடந்த 05/08/2019ல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். தொடர்ச்சியாக தென்காசி தாலுகா அலுவலகத்திலும் வழங்கியுள்ளோம். எனவே உரிய விசாரணை நடத்தி முறையாக சாதிச் சான்றிதழ் வழங்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.