
கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அருகே உள்ள சோமனூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் நேற்று(4.3.2024) மாலை ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டுவிழாவில் பல்வேறு விதமான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பான தங்களது பங்களிப்பைச் செலுத்தினர்.
இந்த சூழலில் ஆண்டு விழாவில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் மாணவர்கள் சாதிரீதியான பாடலுக்கு பாமக துண்டை கழுத்தில் அணிந்தவாறு நடனமாடினர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிழச்சிக்கு வந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் எதிர்ப்பு தெரிவித்தனர். இது விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அரசுப் பள்ளியில் சாதி ரீதியான பாடலுக்கு நடனமாடியதுடன் கழுத்தில் பாமக துண்டை அணிந்து ஆடியது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த மாணவர்களின் பெற்றோர், உடனடியாக பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறினர். இந்த விவகாரம் மாவட்ட கல்வி அலுவலகம் வரை சென்ற நிலையில் உரிய விசாரணை நடத்தித் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.