Skip to main content

வறுமையை தூக்கிய தங்கத்தமிழ் மங்கை அனுராதா!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா சமோவாக நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 121 – 100 எடைப் பிரிவில் பளு தூக்கி தங்கம் வென்ற பெண் இந்திய தேசிய கொடியை உயர்த்திப் பிடித்தார். இந்த காட்சியை பார்த்த புதுக்கோட்டை மாவட்ட மக்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். நம் மண்ணின் மகள் அனுராதா தங்கம் வென்றார் என்பதே அந்த உற்சாகத்திற்கு காரணம். நாம் தமிழர் கட்சி சீமான் உள்பட பலரும் அனுராதாவிற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கிராமத்தில் விழா எடுக்க தயாராகி வருகிறார்கள். இனி ஆங்காங்கே பாராட்டு விழாக்களுக்கு குறைவு இருக்காது.

anurada


அனுராதா நாளை சொந்த ஊருக்கு வர உள்ள நிலையில் அவரது சகோதரர் மாரிமுத்து நம்மிடம்.. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு குக்கிராமம் நெம்மேலிப்பட்டி. விவசாய கூலி குடும்பம். அனுராதா பிறந்த சில வருடங்களில் அப்பா பவுன்ராஜ் இறந்துவிட்டார். அதன்பிறகு அம்மா ராணி தான் கூலி வேலைக்கு போய் எங்களுக்கு சோறு போட்டார். நான் ப்ளஸ் டூ முடித்த பிறகு வறுமையை நினைத்து பள்ளிப்படிப்போடு நிறுத்திவிட்டு தங்கை அனுராதாவை மட்டும் படிக்க அனுப்பினோம். பெருங்களூர் பள்ளியில் படிக்கும் போதே கபடி அணியில் சேர்க்க முயன்றோம். ஆனால் பளுதூக்குவதில் ஆர்வம் காட்டினார். புதுக்கோட்டை கோச் நல்லையாவிடம் அனுப்பினோம். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பிபிஎட் கிடைக்கவில்லை. அதனால் ஒரு டிகிரி போட்டுவிட்டு விளையாட்டில் நாட்டம் காட்டினார். பல்கலைக்கழக அளவில் பரிசுகளை வென்றார். அதன்பிறகு ஜெ.ஜெ கல்லூரியில் மாஸ்டர் டிகிரி படிக்க தொடங்கிய போது நேசனல் போட்டிகளில் கலந்துகொண்டு மெடல் குவித்தார். படிப்படியாக எல்லாவற்றிலும் தங்கம் வென்றார்.

 

anurada


இதைப் பார்த்த பிறகு தான் விளையாட்டு கோட்டாவில் 2 வருசம் முன்னால் எஸ்.ஐ வேலை கிடைத்தது. தஞ்சை மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் பணி. ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுராதாவின் போட்டிகளுக்கு தடை செய்யாமல் உதவிகள் செய்தார். அதனால் அனுராதாவிற்கு ஊக்கமானது.

இந்த நிலையில் தான் இந்திய கேம்ப்ல பயிற்சிக்கு இடம் கிடைத்து பயிற்சி பெற்று வந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவுக்காக வெற்றிக் கனியை பறித்துக் கொண்டு வருகிறார். எங்கள் குடும்பங்களின் வறுமையை நினைத்தே சாதித்துவிட்டாள் என் தங்கை. இப்போது நாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போனது. அடுத்து ஒலிம்பிக் போக தகுதி பெற்று தாயகம் திரும்புகிறார். நாளை சொந்த ஊருக்கு வருவார் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்