டிவிட்டரில் காவல்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில் இயக்குனர் அமீருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகரில் தாய், சகோதரி கண் முன்னே இளைஞரை தாக்கியது, திருச்சியில் ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவரை ஜீப்பில் விரட்டி சென்று ஆய்வாளர் எட்டி உதைத்ததில் பெண் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையை கண்டித்து சினிமா இயக்குனரும், நடிகருமான அமீர் டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி, அமீர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமீர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சாந்தி, இயக்குனர் அமீருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.