எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளான முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் தற்போது உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றங்களில் காலியாக இருந்த நீதிபதி பதவிகள் நிரப்பப்பட்டுவிட்டது. சிறப்பு நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிற உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கை தொடர வேண்டிய அவசியமில்லை எனக் கூறி, முடித்து வைத்தனர். மேலும், எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள், விசாரணையை விரைந்து நடத்தி, தாமதமின்றி முடிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.