டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் தொடர்புடையவர்களை அதிவிரைவாக கண்டுபிடித்து அவர்களுக்கான தண்டனையையும் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் அந்த தண்டனையை நிறைவேற்ற கால அவகாசம் அடுத்தடுத்து மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது டெல்லி என்பதால் வேகமாக செயல்பட்டிருப்பார்களோ என்று சில வழக்குகளை பார்க்கும் போது கேட்கத் தோன்றுகிறது. நாட்டின் உயர்ந்த புலனாய்வு பிரிவாக சி.பி.ஐ. வசம் நீதிமன்றத்தால் ஒப்படைக்கப்பட்ட புதுக்கோட்டை மாணவி அபர்ணா வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பின்வாங்கி செல்கிறது சி.பி.ஐ. ஏன் இப்படி பின்வாங்கி செல்கிறார்கள். உண்மையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது ஒரு கிராமத்து மாணவி தானே என்ற அலட்சியப் போக்கா என்ற கேள்வி சாதாரண மக்களிடமும் எழுந்துள்ளது. 9 வருடங்களாக கண்ணீரோடு நீதி வேண்டி காத்திருக்கிறார்கள் அபர்ணாவின் பெற்றோர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் பனங்குளம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த கலைக்குமார். புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் வசித்து புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். ( தற்போது பணி ஓய்வு ) இவரது மனைவி ராஜம் புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். தற்போது வேறு பள்ளிகளில் பணியாற்றும் இவர்களது மகள் அபர்ணா (15), ( 2011 ல்) மகன் நிஷாந்த்(6) ( 2011 ல்) ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர்.
2011 மார்ச் 9-ம் தேதி பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விட்டனர். தனியார் பள்ளியில் படித்து வந்த அபர்ணா மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரும் அன்றைய தினம் பிற்பகல் பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்ததால் காலையில் வீட்டில் இருந்துள்ளனர். காலை சுமார் 10 மணிக்கு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அபர்ணாவை பாலியல் துன்புறுத்தலுடன், ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து அறைக்குள்ளேயே மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டதுடன், பீரோவில் இருந்த சுமார் 25 பவுன் நகைகளையும் திருடிச் சென்றதும் தெரியவந்துள்ளது. நிஷாந்த் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் சிறுவன் என்று நினைத்து அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுச் சென்றனர். இது குறித்து கணேஷ்நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இக்கொலைக்கு தொடர்பிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் கலைக்குமார் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு விசாரணை அலுவலர்களிடம் கொடுத்துள்ளார். அதன்படி நடைபெற்ற போலீஸாரின் அடையாள அணிவகுப்பில் சம்பவத்தின் போது கொலைக் குற்றவாளிகளை பார்த்ததாக கூறப்படும் அபர்ணாவின் சகோதரர் நிஷாந்த் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலைக்குப் பிறகும் கொலையாளிகள் கைது செய்யப்படாததால் விசாரணையை துரிதப்படுத்தக் கோரி முதலமைச்சருக்கு பெற்றோர் மனு அளித்தனர். இக்கோரிக்கைக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர், அமைப்பினர், ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வழக்கின் நிலையில் முன்னேற்றம் இல்லை.
இதையடுத்து வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுகுறித்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி 2011 டிசம்பர் 13-ம் தேதி வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டார். மாதங்கள் கடந்ததே தவிர புலனாய்வு பிரிவினர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இதனால் அபர்ணாவின் தந்தை கலைக்குமார் மீண்டும் விசாரணையை துரிதப்படுத்தக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதையடுத்து 2012 ஜூலை 13-ம் தேதி விசாரணையை நவம்பர் 2012- க்குள் முடிக்க புலனாய்வு பிரிவுக்கு நீதிபதி மீண்டும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிபிசிஐடி ஐஜி மஞ்சுநாதா, டிஐஜி ஸ்ரீதர், திருச்சி இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் மீண்டும் புதுக்கோட்டையில் விசாரணை மேற்கொண்டனர். அதில் இவ்வழக்கு மிகவும் சவாலாகவே உள்ளது. உண்மைக் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று செய்தியாளர்களிடம் புலனாய்வு அலுவலர்கள் கூறினர்.
மதுரை உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதால் புலனாய்வு பிரிவின் மீது நம்பிக்கை இழந்த கலைக்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றகிளையில் முறையிட்டார். இம்மனுவை 2013 செப்டம்பர் 10-ம் தேதி விசாரித்த நீதிபதி இக்கொலைக்கான விசாரணை அறிக்கையை 27-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்புடையதாக கருதப்படும் அதாவது அபர்ணாவை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லுபவரான ஆட்டோ ஓட்டுநர் புதுக்கோட்டை கணேஷ்நகர் ராஜ்முகமது மகன் சாகுல்ஹமீது, அபர்ணாவின் அம்மாவை பள்ளிக்கு அழைத்துச் செல்லுபவரான ஆட்டோ ஓட்டுநர் இ. முகமதுஹனீபா, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கவிவேந்தன், இசைவேந்தன் மற்றொருவர் சின்ராஜ் ஆகியோர் செப். 26-ம் தேதி நீதிமன்ற சம்மன் மூலம் புதுக்கோட்டை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்பு ஆஜராகி, வாக்கு மூலம் அளித்துவிட்டுச் சென்றனர். அதன்பிறகு செப். 27-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் சிபிசிஐடி போலீஸார் ஒப்படைத்தனர்.
அதன்பிறகு சிபிஐ கண்காணிப்பாளர் ஹபீஸ்சிங் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை (2013 டிச.17) மாணவியின் பெற்றோரான கலைக்குமார் - ராஜம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில் இக்கொலை தொடர்பாக சந்தேகிக்கும் நபர்கள் குறித்தும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு பலமுறை சிபிஐ புலனாய்வு பிரிவினர் நேரடி விசாரணை மேற்கொண்டும் இதுவரை மாணவி அபர்ணாவை கொன்ற உண்மை கொலையாளிகளை கைது செய்யவில்லை. 2018 ல் அபர்ணாவின் வன்கொலைக்கு நீதி வேண்டும். கொலையாளிகள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்பதால் நீதி மறுக்கப்படுகிறது. அதனால் அரசியல் கட்சிகளும் தங்கை அபர்ணாவுக்காக நீதி கேட்க போராட முன்வர மறுக்கிறார்கள். அதனால் காலம் கடந்தாலும் நீதி வேண்டும் என்று போராடினார்கள்.
இந்த நிலையில் தான் கடந்த 2019 பிப்ரவரி யில் சி.பி.ஐ. குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் பதில் சொல்லி வழக்கை முடித்துக் கொண்டனர். அதற்கான ஆவணங்களை திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டதாகவும் பதில் கூறியிருந்தனர். அதனால் பெற்றோர் தரப்பு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அங்கேயும் முடித்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் போலீசாரின் புலனாய்வு செய்ய முடியாத போக்கை வறுத்தமளிக்கிறது. அதனால் ரூ.1 கோடி இழப்பீடு வேண்டும் என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையை நாடியுள்ளனர் பெற்றோர். அதற்கான பதில் அளிக்க நீதிபதி அவகாசம் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து அபர்ணாவின் தந்தை கலைக்குமார் கூறும்போது.. சம்பவம் நடந்த போது நேரடி சாட்சியாக என் மகன் இருந்தான். தடயங்கள் சேகரித்தார்கள். சந்தேகித்த நபர்களின் பெயர்களை சொல்லிவிட்டேன். அந்த நபர்கள் சம்பவத்திற்கு பிறகு எங்கெல்லாம் சென்றார்கள் என்ற விபரங்களை எல்லாம் போலிசார் சேகரித்தனர். அறிவியல் ஆய்வுகளும் உறுதி செய்தது. ஆனால் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தினேன் 16 உயர்நீதிமன்ற நிதிபதிகள் வழக்கை விசாரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நீதிபதியிடமும் கால அவகாசம் கேட்டே நீதி கிடைக்காமல் வழக்கை மூடி வைத்துவிட்டார்கள். அதன் பிறகு தான் நானும், என் மனைவியும் அரசு ஊழியர்கள். அரசு வேலைக்காக சென்றுவிட்ட போது வீட்டில் தனியாக இருந்த குழந்தைக்கு பாதுகாப்பு இல்லாமவ் போய்விட்டது. போலிஸ் விசாரனையும் புலனாய்வும் பலனளிக்கவில்லை. அதனால் ஒரு கோடி இழப்பீடு வேண்டும் என்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்திருக்கிறேன்.
இது மட்டுமின்றி கடந்த காலங்களில் நான் சந்திக்காத உயர் போலீசார் இல்லை. இப்போது கடந்த 2019 டிசம்பர் மாதம் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வரை என் மகள் கொலைக்கு நீதி வேண்டும் என்று தனித் தனியாக மனு அனுப்பி இருக்கிறேன். உச்சநீதிமன்றம் வழக்கு பதிவு செய்திருப்பதாக வந்த தகவல் மட்டும் எனக்கு திருப்தி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்திலாவது என் மகள் சாவுக்கு நீதி கிடைக்கிறதா என காத்திருக்கிறேன் என்றார் கண்ணீர்மல்க..
9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மாணவி கொலைக்கு நீதி வேண்டும் என்று அவரது பெற்றோருடன் உறவினர்களும் சட்டப்படி போராடியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.
உயர்ந்த விசாரனை பிரிவான சி.பி.ஐ. கூட அபர்ணாவின் கொலை குற்றவாளிகளை கைது செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறது. எந்த சக்தி தடுக்கிறது. என்ற கேள்வி புதுக்கோட்டை மக்களிடம் எழுந்துள்ளது.