Skip to main content

நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் மீது வழக்குப் பதிவு

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

Case register on Morapur NTK party members

 

அரூரை அடுத்த மொரப்பூரில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

 

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், பல்வேறு வழக்குகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் நடைபெறும் கனிமவள கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட திமுகவினரைக் கொச்சைப்படுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்த திமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கியும் கொண்டனர்.

 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உரிய அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்துதல், பொது அமைதிக்குத் தொல்லை தருதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்டவை குறித்து மொரப்பூர் உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் தொகுதி தலைவர் இளையராஜா, செயலர் திலீப், நிர்வாகிகள் மகேஷ், வெள்ளிங்கிரி, புதியவன் செந்தில், பிரபாகரன், சிவராமன், இளவரசன் உள்பட 30 பேர் மீது மொரப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்