எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்து வருகிறது தமிழக அரசு. இந்த அடிப்படையில் 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தர்மபுரி பேருந்து எரிப்பில் கைதானவர்களை விடுவிக்கலாமா என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2000-ல் தர்மபுரியில் நடந்த பேருந்து எரிப்பில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் பலியானார்கள். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 2016-ல் மார்ச் மாதம் 3 பேரின் தூக்கினை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இதையடுத்து மூவரும் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
இந்த மூவரும் 18 ஆண்டுகாலம் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்யலாமா என்பது குறித்து சிறைத்துறையுடன் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.