திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியில் ஒரு குழந்தை பக்கத்து வீட்டின் கதவை அடிக்கடி தட்டிவிட்டு, அவர்கள் கதவைத் திறப்பதற்குள் ஓடிவிடும். இதேபோன்ற ஒரு சம்பவத்தைத்தான் சிவகாசியைச் சேர்ந்த தினேஷ்குமாரும் மஹேந்திர குமாரும் நிஜ வாழ்க்கையில் செய்து வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ரவிகுமார் என்பவரது வீட்டுக் கதவை இரவு நேரங்களில் தட்டியிருக்கிறார்கள். ஆனால் சத்தம் கேட்டு அவர் திறந்து பார்க்கும்போது இருவரும் ஓடிவிடுவார்கள்.
கடந்த 27-ஆம் தேதி இரவு 7 மணியளவில் வழக்கம்போல, அந்த வீட்டுக் கதவைத் தட்டியிருக்கின்றனர். ரவிகுமார் கதவைத் திறந்தபோது அவர் வீட்டு முன்பாக இருவரும் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம் ரவிகுமார் “எதுக்கு என் வீட்டுக் கதவ தினமும் தட்டுறீங்க? இந்த மாதிரி பண்ணுனா போலீஸ்ல புகார் கொடுத்திருவேன்.” என்று மஹேந்திர குமாரிடம் கூற, தினேஷ்குமார் கோபத்தில் “அப்படித்தான்டா கதவ தட்டுவோம்.” என்று தாக்கியதோடு அரிவாளைக் காட்டி “உன்ன கொன்னு போட்ருவேன்...” என்று மிரட்டியும் இருக்கிறான். சிவகாசி டவுன் காவல் நிலையம், தினேஷ்குமார் மற்றும் மஹேந்திர குமார் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.