நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது ஒருவரைத் தாக்கியதாக அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதம் ஏந்திய காவல்துறையின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை (22/02/2022) காலை 08.00 மணிக்கு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செய்து வருகிறது.
இந்த நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வாக்களிக்கச் சென்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் தாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், தி.மு.க.வினர் தங்களைத் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், தி.மு.க.வைச் சேர்ந்த 10 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.