தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும்; குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கப்படும்; கல்விக் கடன் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைத்தது. மு.க. ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு அமைந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் நேற்று (28/07/2021) போராட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி; தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ. பன்னீர்செல்வம்; பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டு, அளித்த வாக்குறுதிகளை உடனடியாக திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, கரோனா விதிமுறைகளை மீறியது உள்ளிட்டவை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்பட 90 பேர் மீது சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.