காவிரி மேலாண்மை வழக்கில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை - தமிழக அரசு வாதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நாடாளுமன்றத்தின் திருத்தங்களுக்கு உட்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்கு ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் நடுவர் மன்ற தீர்ப்பு நாடாளுமன்றத்தின் திருத்தங்களுக்கு உட்பட்டது என்று கூறியுள்ளார்.
நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்ய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் வழக்கறிஞர் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு 2007-ம் ஆண்டு வெளியாகி 6 ஆண்டுகள் கழிந்த நிலையில் 2013-ம் ஆண்டில் அரசிதழில் வெளியிடப்பட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து வாதித்த கர்நாடக அரசின் வழக்கறிஞர் பாலி நாரிமன் தமிழக அரசின் கோரிக்கைப்படி மாதந்தோறும் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறியுள்ளார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்தது தவறான அணுகுமுறை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டு அரசாணை வெளியிட்டும் இதுவரை நடுவர்மன்றம் அமைக்காதது ஏன் எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் காவிரி வழக்கில் இரண்டு மாநிலங்களுக்கும் இடையே சுமுக தீர்வு காண மத்திய அரசு வழிவகை செய்யவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றமே திட்டத்தை வகுத்து வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. 2007-ல் முதல் இன்று வரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.