கேரளாவில் பிரசித்தி பெற்ற முக்கியக் கோவிலான சபரிமலைக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், மகர மண்டல பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். மேலும் மாதம் தோறும் முதல் 5 நாட்கள் நடை திறக்கும்போது, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்த நிலையில் வழக்கம்போல் மாதம்தோறும் நடை திறந்தும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கடந்த 7 மாதங்களாக பக்தர்கள் யாரும் சபரிமலைக்குச் செல்லவில்லை.
இந்தநிலையில், அடுத்த மாதம் 16-ஆம் தேதி மகர மண்டல காலம் தொடங்க இருப்பதால் பக்தா்களை அனுமதிக்க கேரள அரசும் தேவசம் போர்டும் முடிவு எடுத்துள்ளது. அப்போது தினமும் 1,000 அல்லது அதற்கு மேல் எவ்வளவு பக்தா்களை அனுமதிக்கலாம் என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை சபரிமலை நடை திறக்கப்படுகிறது. இதில் அந்த 5 நாட்களும் தினமும் 250 பேர் மட்டும்தான் அனுமதிக்கபட உள்ளனா். அதுவும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டவா்கள் மட்டுமே அனுமதிக்கபட உள்ளனா். இதுகுறித்து கூறிய திருவிதாங்கூா் தேவசம் போர்டு தலைவா் வாசு, அடுத்த மாதம் மண்டல மகர காலம் தொடங்கயிருப்பதையொட்டி, அதற்கு முன்னோடியாக ஐப்பசி மாத பூஜைகளில் தினமும் 250 பக்தா்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவும் இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது. மேலும், அந்த பக்தர்களும் கரோனா பரிசோதனை ரிப்போர்ட் அடிப்படையில்தான் அனுமதிக்கபட உள்ளனா் என்றார்.