திருச்சி மாவட்டம் முசிறியில் சமீப காலமாக உயர் அதிகாரிகளின் பெயரை சொல்லி மணல் மாஃபியாக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த இரு காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார் திருச்சி எஸ்.பி.
முசிறி அருகே உமையாள்புரம், வெள்ளூர், செவந்தலிங்கபுரம், ஏவூர், அய்யம்பாளையம் போன்ற ஊர்களில் உள்ள காவிரி படுகையில் இருந்து தொடர்ந்து மணல் கடத்தல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு லாரிகளிலும், லோடு வேன்களிலும் நடைபெற்று வருகிறது.
மணல் கொள்ளையை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதற்கு காவல்துறையில் உள்ள சிலரின் உதவியே காரணம் என்று என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
கடந்த வியாழக்கிழமை 05/03/2020 அன்று நள்ளிரவு கரட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் (30), திருப்பதி (28) ஆகிய இரண்டு பேரும் மணல் முட்டைகளை Bolero Pikub- ல் கடத்திக் கொண்டு வரும் போது வடுகப்பட்டி அருகே லோடு வேனை மடக்கி மப்டியில் இருந்த கான்ஸ்டபிள் முருகானந்தம், சிவராமன் டிஎஸ்பி, எஸ்.பி. பெயரை கூறி ரூ.30.000 பணம் பேரம் பேசியிருக்கிறார்கள்.
இதை கவனித்த அப்பகுதியில் உள்ள நபர் டிஎஸ்பி செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக இன்ஸ்பெக்டர் பால்ராஜ் அவர்களை சம்மந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பியதுடன் டிஎஸ்பியும் அங்கு விரைந்து சென்றுள்ளார் அங்கு பணி முடிந்து மப்டியில் இருந்த கான்ஸ்டபிள் இருவரையும் பணத்துடன் கையும் களவுமாக பிடித்தனர். இதன் அடிப்படையில் திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக் கான்ஸ்டபிள் முருகானந்தம் (2967), கான்ஸ்டபிள் சிவராமன் (1747) இருவரையும் பணியிடம் நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
தொடர்ச்சியாக இந்த மணல் கொள்ளை நடக்கும் காவேரி படுகை உள்ள ஊர்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இனி வரும் காலங்களிலாவது கனிம வளங்களை காக்க வேண்டும் என்று பொதுமக்கள் திருச்சி கலெக்டரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடதக்கது.