சீனியம்மாள், விருதுநகர் மாவட்டம் - குண்டாயிருப்பில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிகிறார். இவரை, பட்டா வழங்குவதில் கையூட்டு பெற்று முறைகேடாகச் செயல்பட, ஆறுமுகக்கனி என்பவர் வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால், சீனியம்மாளுக்கு ஆறுமுகக்கனிக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் எழுவதுண்டு. இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி காலை 11 மணியளவில், வி.ஏ.ஓ. அலுவலகத்தில் சீனியம்மாள் மீது உரசியபடி பாய்ந்து தவறாக நடக்க முயற்சித்துள்ளார் ஆறுமுகக்கனி.
அப்போது ஆறுமுகக்கனி “நான் சொல்வதை செய்வதற்காகத்தான் அரசாங்கம் உனக்கு சம்பளம் கொடுக்கிறது. நான் சொல்லுறத நீ கேட்க வேண்டும்.” என்று அடவாடியாக நடந்திருக்கிறார். உடனே வி.ஏ.ஓ. சீனியம்மாள் சத்தம்போட, பொதுமக்கள் அங்கு வந்துவிட்டனர். ஆனாலும் ஆறுமுகக்கனி, “நான் சொல்லுறத கேட்கலைன்னா உன்னை என்ன செய்யுறேன் பாரு..” என்று மிரட்டிவிட்டே சென்றிருக்கிறார்.
தான் பணியில் இருந்தபோது பணி செய்ய விடாமல் தடுத்து களங்கப்படுத்தும் எண்ணத்தில் மோசமான செயல்களில் ஈடுபட்ட ஆறுமுகக்கனி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சீனியம்மாள் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் காவல் நிலையம் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சீனியம்மாளைத் தொடர்புகொண்டோம். “நான் கணவரை இழந்தவள். என்னால இங்கே நிம்மதியா வேலை பார்க்க முடியல. இங்கே இருக்கிற தலையாரி குடிகாரரா இருக்கிறாரு. அவரால எனக்கு பிரச்சனைக்கு மேல பிரச்சனை. என்னை எல்லாருகிட்டயும் தவறா சித்தரிக்கிறாரு. சங்கத்துல அவரு பொறுப்புல வேற இருக்காரு. அந்த தலையாரி தூண்டிவிட்டுத்தான் ஆறுமுகக்கனி என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு. இதை நான் ஆலங்குளம் போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னேன். அப்படியெல்லாம் புகார் எழுதக்கூடாதுன்னு, ஆறுமுகக்கனி மேல மட்டும் புகார் எழுதித்தரச் சொன்னாங்க. காரணம், சாதிக்காரன் என்பதால் அந்த தலையாரிக்கு போலீஸ் சப்போர்ட் பண்ணுது. அந்த தலையாரி குறித்து நான் மாவட்ட கலெக்டரிடமும் புகார் பண்ணிருக்கேன்.” என்றார் பரிதாபமாக.
நாம் ஆலங்குளம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராமசாமியிடம் பேசினோம். “அந்தம்மா மேலயும் புகார் இருக்கு. வேலைக்கு சரியான நேரத்துக்கு வர்றதில்லைன்னு. யார் மேலயாச்சும் பழி சுமத்துறதே அவங்களுக்கு வேலையா போச்சு.” என்று சலித்துக் கொண்டார்.
பெண்கள் அரசு அலுவலராக இருந்தாலும், பாதுகாப்பில்லை என்பது வேதனைக்குரியது.