நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, தகவல்களை மறைத்த வேட்புமனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ வாக்குப்பதிவைத் தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை எதிர்த்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.